Sunday, August 29, 2021

நான்_அம்பேத்கர்_பேசுகிறேன்

#நான்_அம்பேத்கர்_பேசுகிறேன்....

என் சிலையின் தலையை உடைக்க காரணம் - என் சிலைக்கும் உயிர் இருப்பதாய் அவர்கள் நினைக்கிறாா்கள்.!
என் சிலையின் பீடத்தைக்கூட தகர்க்க
காரணம்-அந்த பீடத்துக்கு பிற உயிர்களையும் உயிர்ப்பிக்கும் சக்தி
இருப்பதாய் அவர்கள் நினைக்கிறாா்கள்.!

என் சிலையை நீ உடை
உனக்கு உடைக்கும் உரிமையினையும்
வாங்கி தந்தது நான் தான்..!
நீ வெளியே வரும் சட்டமும் 
என்னாலேயே எழுதப்பட்டது..!!

நீ மண் என்றது மனு
மனிதன் எனச் சட்டம் செய்தவன் நான்.!
நீ காலில் பிறந்தவன் என்று மனு
நீ சாதிக்கப்பிறந்தவன் என்றவன் நான்.!
கல்லும் மண்ணும் கடப்பாரையும் தாங்கிய கைகள் "பேனா" பிடிக்கட்டும்
என்றவன் நான்..!
மீண்டும்,
கல்லும் கடப்பாரையும் பிடிக்க நினைப்பவன்
இடிக்கதுடிப்பது என்னைத்தானே 
இருக்கும்...?

சாதியே சட்டமாக இருந்த காலத்தில்
நீதியை சட்டமாக்கியவன் நான்.!
அந்த சதி புரியாக்கூட்டம்
இடிக்கத் துடிப்பது
என்னைதானே இருக்கும்..?

எல்லோா்க்கும் சுதந்திரம் கேட்டேன்
எதிர்போா் என்னை அடியுங்கள்;
எல்லோருக்கும் சமத்துவம் விரும்பினேன்
நிகாரிப்போா் என்னை அடியுங்கள்;
எல்லோரும் சகோதரா் என்றேன்
விரும்பாதவர் என்னை அடியுங்கள்.....
உங்களுக்காகவே பேசினேன்
உங்களுக்காகவே எழுதினேன்
உங்களுக்காகவே செயல்பட்டேன்
அடிபடத் தகுதியானவன்  நான் தான்..!
நீங்கள் அடிப்படாமல் காப்பாற்றிய நான்
அடிபடத்தான் வேண்டும்.

இந்த அடி எனக்கு வலிக்கும் என்று
மட்டும் நினைக்காதீர்கள்....
நான் மனுசாஸ்திரங்களை கேள்வி
கேட்டவன்..?
நான் அவதாரங்களை கேள்வி
கேட்டவன்..?
நான் கடவுள்களை கேள்வி
கேட்டவன்..?
நான் வேள்வித் தீயைக் கேள்வி
கேட்டவன்..?
எனவே,
நீ வெட்டிய அருவாளின் முனை
மழுங்கி இருப்பதை 
உற்றுப்பாருங்கள்.
இந்த அடியால் என்னை அவமானப்படுத்தி விட்டதாக மட்டும்
நினைக்காதீர்கள்.....
மாட்டுவண்டியில் உருட்டிவிடப்பட்டு
நாடாளுமன்றத்தில் போய் விழுந்தவன் நான்;
நான் பட்டங்களை வாங்கியவனல்ல
பல்கலைகழகத்தினையே வாங்கியவன்;
நான் கட்சி தலைவனல்ல
பல்லாயிரம் கட்சிகளை உருவாக்கிய
தலைவர்களின் தலைவன்;
சாதித்தலைவன் அல்ல
சமூகத்தலைவன்;

எனது லட்சிய சமூகத்தில் நீங்கள் எல்லாம்
உத்தமர்களாக வாழ்வீர்கள் என்று நினைத்தேன்,
இன்னுமா நீங்கள்
சாதித்சகதியில் புரள்கிறீர்கள்..?
எனது சிலை உடைக்கப்பட்டது பற்றியே
எல்லோரும் பேசுகிறாா்கள்
அது சிலமணி நேரத்தில் முளைத்தது
எதனால் என்று யோசியுங்கள்..?
தொட்டது ஆட்டின் தலை அல்ல
சிங்கத்தின் தலை என்பதால்
சிலிர்த்தெழுந்தது....

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற
வள்ளுவன் மண்ணில்...
வாடியபயிரைக் கண்டு வாடிய
வள்ளலாளர் மண்ணில்...
சாதிமத பேதமற்ற திராவிடர்கள் என்றழைத்த அயோத்தியாா் மண்ணில்...
பூர்வீகக்குடிகளுக்காக போராடிய
பெரியாா் மண்ணில்...
நீ சாதி பாா்த்து கொல்கிறாய்,
நீ சாதி பாா்த்து அடித்து உதைக்கிறாய்,
நீ சாதி பாா்த்து சதியாட்டம் ஆடுகிறாய்,
என்றால்,;
உனது ஊரில் சிலையாக இருப்பதற்கே
அவமானப்படுகிறேன்...!!!


Saturday, August 21, 2021

சிக்கலை தீர்த்துவைக்கும் மதுரை போக்குவரத்து காவலரின் உன்னதமான பணி

 போக்குவரத்தில் முண்டியடித்து செல்லும் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய காணொளி ,விட்டுக்கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை அம்மா அப்பா தம்பி தங்கை ஏன் மனைவியிடம் எவ்வளவு விட்டுக்கொடுத்து போறீங்க அதுபோல சாலையிலும் விட்டுக்கொடுத்து போனால் என்ன ? 

இந்த அறிவுரையை கேளுங்கள் 


 


Friday, August 20, 2021

நொச்சி மரம்


 நொச்சி...

ஆகச் சிறந்த ஒரு மூலிகை என்றால் அது மிகையல்ல. `கொசுவை விரட்டும் தன்மை படைத்தது’ என்ற தகவலைக் கேள்விப்பட்டதில் இருந்து, பெரும்பாலான மக்களால் வீடுகளில் இது வளர்க்கப்பட்டுவருகிறது. இது ஒரு குறு மரமாக வளரும் தன்மைகொண்டது. இந்த மூலிகைச் செடியை ஆடு, மாடுகள் உள்ளிட்ட விலங்குகள் நெருங்காது. அதனால், இது வயல்வெளிகளின் ஓரமாகவும், வேலி ஓரங்களிலும் வளர்க்கப்படுகிறது. இந்தச்செடி சமவெளியில் 4 மீட்டர் உயரமும், மலைப் பகுதிகளில் 6 மீட்டர் உயரமும் வளரக்கூடியது. இந்த இலைக்கு பூச்சியைத் தடுக்கும் திறன் இருக்கிறது. அதனால், தானியங்களை சேமித்துவைக்கும் குதிர்களில் நொச்சி இலைகளையும் சேர்த்து மூடி வைத்தால் பாதிப்புகள் ஏற்படாது. இதன் மூலம் பழங்காலத்திலிருந்தே இந்த இலை பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது என்பதை அறிய முடியும்.


நொச்சி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆவி (வேது பிடித்தல்) பிடித்து வந்தால் மூக்கடைப்பில் தொடங்கி ஜலதோஷம், சளித் தொல்லை, தலைபாரம், தலைவலி என அனைத்துப் பிரச்னைகளிலும் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும், இதன் இலையை பச்சையாகவோ, உலர்த்தியோ தலையணை உறைக்குள் வைத்து அதன் மேல் தலை வைத்து உறங்கினால், தலைவலி, ஜலதோஷம், சைனஸ் கோளாறுகள் சரியாகும்.






காய்ச்சலின்போது நொச்சி இலையை வேகவைத்து அதன் நீராவியை வேது பிடிப்பதன் (ஆவி பிடித்தல்) மூலம் வியர்வை உண்டாகி, காய்ச்சலின் தீவிரம் மெள்ள மெள்ளத் தணியும். இதே நீரை உடல் வலியின்போது பொறுக்கும் சூட்டில் உடலில் ஊற்றிவர, நல்ல நிவாரணம் கிடைக்கும்.

நொச்சி இலையுடன் மிளகு, பூண்டு, கிராம்பு சேர்த்து மென்று தின்று வந்தால், ஆஸ்துமா குணமாகும். மேலும், நொச்சி இலையை சுக்கு சேர்த்து அரைத்து, நெற்றி, கன்னம் போன்ற பகுதிகளில் பற்றுப் போட்டு வந்தால், தலைவலி சரியாகும். வலி, வீக்கம், கீல்வாயு ஏற்பட்டால் நொச்சி இலையை வெறுமனே வதக்கி ஒத்தடம் கொடுப்பதன் மூலம் நிவாரணம் பெறலாம். அடிபட்ட வீக்கம் மட்டுமல்லாமல், உடம்பில் தலை முதல் கால் வரை எந்தப் பகுதியில் அடிபட்டாலும் இந்த ஒத்தடம் பலன் தரும். நொச்சி இலைச் சாறு அல்லது இலையுடன் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் சிறிதளவு எடுத்து தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் சைனஸ், கழுத்தில் நெறிகட்டுதல், கழுத்துவலி போன்றவை சரியாகும். நரம்புக் கோளாறுகளால் கழுத்துவலி வந்து அவதிப்படுவோருக்கும் இந்தச் சிகிச்சை பலனளிக்கும்.

கொசுவை விரட்ட என்னென்னவோ மருந்துகள் வந்தும் அவை பலனளிப்பதில்லை. மேலும் அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, இதை மாற்று நிவாரணியாகப் பயன்படுத்தலாம். காய்ந்த அல்லது பச்சையாக உள்ள நொச்சி இலைகளை தீயில் எரித்து, புகைமூட்டம் போட்டு வந்தால் கொசுக்கள் விலகும். படுக்கை அறையில் வெறுமனே நொச்சி இலைகளை வைத்தாலும் கொசுக்கள் நெருங்காது. நொச்சி, வேப்பிலை போன்றவற்றை புகை மூட்டம் போடுவதாலும் கொசுத் தொல்லைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம். நொச்சி இலையை ஆடு, மாடுகள் உண்ணாது என்பதால், வீடுகளைச்சுற்றி வளர்க்கலாம். அதே நேரத்தில் கொஞ்சம் ஈரமான இடங்களில் செழித்து வளரும். நொச்சி எளிதில் வளராது என்று சிலர் சொல்கிறார்கள். தொடக்கத்தில் ஈரம் காயாதவாறு பார்த்துக்கொண்டால், மிக எளிதாக வளரக்கூடியது. நொச்சியின் வேர் முடிச்சுகளை எடுத்தும் நடலாம்.



நொச்சி, பொடுதலை, நுணா இலை போன்றவற்றால் ஆன கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தத்தை கட்டுப்படுத்தக்கூடியது. புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை நொச்சி இலைக்கு உள்ளது என்பதால், அது குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மாட்டுச் சாணத்துடன் நொச்சி இலைகளைச் சேர்த்து முதுகுவலிக்குப் பூசினால் நல்ல பலன் கிடைக்கும். தேமல் உள்ள இடங்களில் நொச்சி இலைச் சாற்றைப் பூசினாலும் நிவாரணம் கிடைக்கும். ஆக, பல்வேறு வழிகளில் நல்லதொரு மருந்தாகிறது நொச்சி.

மலைச்சரிவுகளில் மண் அரிப்பைத் தடுக்க நொச்சியை நெருக்கமாக வளர்க்கலாம். ஆறுகள், நீரோடைகள் போன்றவற்றின் கரைகளிலும் இவற்றை நட்டு வைக்கலாம். இதனால் கரைகளுக்கு வலு சேர்க்கும்; வெள்ளம் ஏற்படும்போது கரைகள் உடையாமல் காக்கும். நீர்ச் செழிப்புள்ள இடங்களில் வளரக்கூடிய நொச்சி காற்றைத் தடுக்கும் தன்மை படைத்தது. வீடுகளின் முகப்பில் நடுவதால் தூசியை வடிகட்டுவதோடு கொசுக்களை விரட்டும் தன்மையும் படைத்தது

சதங்கள் கடந்த சாதனை நாயகர்களின் 100 ஆவது படங்கள் அனைத்தும் #இசைஞானி அவர்கள் தான் இசை

 சதங்கள் கடந்த சாதனை நாயகர்களின் 100 ஆவது படங்கள் அனைத்தும் #இசைஞானி அவர்கள் தான் இசை

சிவகுமார், கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு... 100வது படங்களுக்கு இளையராஜாதான் இசை!
இளையராஜா, 76ம் ஆண்டு திரையுலகிற்கு வந்தபோது, கமலும் ரஜினியும் கொஞ்சம் கொஞ்சமாக உயரத்துக்கு வந்துகொண்டிருந்தார்கள். சிவகுமார் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சத்யராஜ் வந்துவிட்டார். பின்னர், பிரபுவும் நடிக்க வந்தார். விஜயகாந்த் தனக்கென தனியிடம் பிடித்தார்.
‘அன்னக்கிளி’க்குப் பிறகு இளையராஜா இசையில் சிவகுமார் நிறைய படங்களில் நடித்தார். தேவராஜ் - மோகன் இயக்கம், சிவகுமார், இளையராஜா கூட்டணி வெற்றிக் கூட்டணி எனப் பேசப்பட்டது. இந்தக் கூட்டணியில் வந்ததுதான் ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’. பழைமையையும் புதுமையையும் மோதிக்கொள்ளவிட்டு, நாகரீகத்தையும் பண்பாட்டுச் சிதறலையும் கருவாக்கி உருவாக்கிய ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.
‘மாமன் ஒருநா மல்லிகப்பூ கொடுத்தான்’, ‘வெத்தல வெத்தல வெத்தலயோ’, ‘என்னுள்ளில் ஏதோ ஏங்கும் கீதம்’, ‘உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி’ என்று எல்லாப் பாட்டுமே செம ரகம். இந்தப் பாடலைப் பாடாத தெருக்களோ கல்யாணவீடுகளோ திருவிழாக்களோ மேடைக் கச்சேரிகளோ இல்லை. சிவகுமாருக்கு இந்தப் படம் 100வது படம். அட்டகாச வெற்றியைத் தந்தது. 79ம் வருடம் மே மாதம் 18ம் தேதி ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ வெளியானது.
ஆமாம்... சிவகுமார், கமல், ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் ஆகியோருக்கு ஒரு ஒற்றுமை உண்டு. இவர்களின் நூறாவது படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்திருந்தார்.
கமல் முதன்முதலாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அதற்கு ஹாசன் பிரதர்ஸ் எனப் பெயரிட்டார். பார்வையற்ற கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு, படத்துக்கு ‘ராஜபார்வை’ எனப் பெயரிட்டார். மிகப்பெரிய தயாரிப்பாளரும் இயக்குநருமான எல்.வி.பிரசாத்தை நடிகராக அறிமுகப்படுத்தினார். தெலுங்கில் மிகப்பெரிய டைரக்டராக இருந்து கொண்டு, தமிழில் ‘திக்கற்ற பார்வதி’யை இயக்கி, பின்னாளில் கமலின் ஆஸ்தான இயக்குநர் என்று பேரெடுத்த சிங்கிதம் சீனிவாசராவை முதன்முதலாக தன் சொந்த பேனரில் இயக்குநராக்கியது, இந்தப் படத்தில்தான்.
மாதவி நடித்திருந்தார். ‘அந்திமழை பொழிகிறது’, ‘அழகே அழகு தேவதை’ என பாடல்கள் எல்லாமே செம ஹிட்டு. சிவகுமாருக்கு ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ போல், கமலுக்கு ‘ராஜபார்வை’. ஆமாம், கமலின் 100வது படம். 81ம் ஆண்டு, ஏப்ரல் 10ம் தேதி வெளியானது ‘ராஜபார்வை’.
அநேகமாக, அதிக அளவில் ரஜினிக்குத்தான் இளையராஜா இசையமைத்தார் என்பார்கள். கவிதாலயா பேனரில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், ரஜினி நடித்த ‘ஸ்ரீராகவேந்திரர்’ ரசிகர்களால் மறக்கமுடியாத படம். தன் ஆசைக்காக ரஜினி நடித்த படம். வசூல் பற்றிய கவலையில்லாமல், கமல் தரமான படம் கொடுக்க முன்வந்தது போல, ரஜினி தன் குருவைப் பற்றிச் சொல்ல படமெடுத்தார். 85ம் ஆண்டு, செப்டம்பர் 1ம் தேதி வெளியானது ‘ஸ்ரீராகவேந்திரர்’. இந்தப் படம் ரஜினியின் 100வது படம். 89ம் ஆண்டு, அக்டோபர் 28ம் தேதி வெளியானது ‘வாத்தியார் வீட்டுப் பிள்ளை’. சத்யராஜ் நடிக்க, பி.வாசு இயக்கினார். இளையராஜாவின் இசையில் எல்லாப் பாடல்களும் நன்றாக அமைந்திருந்தன. இது, சத்யராஜின் 100வது படம்.
இன்றைக்கு விஜயகாந்தை, கேப்டன் கேப்டன் என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள். அப்படி கேப்டன் என்று அழைப்பதற்கு காரணம்... ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்.கே.செல்வமணி ‘புலன் விசாரணை’ எடுத்த கையோடு அடுத்ததாக இந்தப் படத்தைக் கொடுத்தார். சுவர்ணலதா குரலில் அமைந்த ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடல் போதுமே... பட்டையைக் கிளப்பிற்று. பின்னணி இசையிலும் பிரமாண்டம் ஏற்றியிருப்பார். 200 நாட்களைக் கடந்து ஓடிய ‘கேப்டன் பிரபாகரன்’ விஜயகாந்தின் 100வது படம். 91ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியானது.
சிவாஜி, பிரபு, கார்த்திக், ரஜினி, கமல் என்றெல்லாம் இயக்கி ஒரு ரவுண்டு வந்த ஆர்.வி.உதயகுமார், சிவாஜி புரொடக்‌ஷன்ஸின் ‘ராஜகுமாரன்’ படத்தை இயக்கினார். 94ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெளியானது இந்தப் படம். எல்லாப் பாடல்களும் அட்டகாசமாக அமைந்தது.
சிவகுமார், கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு ஆகியோர் கொடிகட்டிப் பறந்த 80களில், மோகன் நடத்தியது தனி ராஜாங்கம். நூறு படங்களைத் தொட்டாரா தொடவில்லையா என்பது தெரியாத நிலையில், மோகன் நடித்த கோவைத்தம்பியின் ‘உதயகீதம்’ தான் 50வது படமாக இருக்கும் என்கின்றனர் அவரின் ரசிகர்கள். இது இளையராஜாவின் 300வது படம். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றபடம்.
அதேபோல், மோகன், சிவகுமார், லட்சுமி, ராதிகா நடிப்பில், கலைஞரின் வசனத்தில் வெளியான ‘பாசப்பறவைகள்’ 75வது படமாக இருக்கலாம் என்கிறார்கள். இதுவும் இளையராஜாதான் இசை. இதில் வரும் ‘தென்பாண்டித் தமிழே’ என்றைக்குமான ஆல்டைம் பாடல்!
ஆக, சிவகுமார், கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு ஆகியோரில், சிவகுமார், விஜயகாந்த் படங்கள் மட்டுமே வெற்றிப் படங்களாக அமைந்தன. அதேசமயம், எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்து வெற்றிபெற்றார் இளையராஜா.
நன்றி ++++++ இந்து தமிழ்




ஒருதலை ராகம்



ஒருதலை ராகம் பட பூஜை.

படம் சூப்பர் ஹிட்டாகி கோடி கோடியாகப் பணம் வரணும்.
சுற்றியிருந்தவர்கள் வாழ்த்து சொன்ன ஐயரை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.
படத்தில் நடிப்பவர்களில் ஒரு முகம் கூட தெரிந்த முகம் கிடையாது.
படப்பிடிப்பு ஒழுங்காக நடந்து முடிந்து, சிக்கல் எதுவுமின்றித் திரையரங்கில் சொன்ன தேதியில் வெளியாகுமா என்பதே சந்தேகம். இந்த நிலையில் படம் சூப்பர் ஹிட்டாகி கோடிக்கணக்கில் கொட்டவேண்டும் என்று வாழ்த்துகிறாரே என்று பூஜையில் கலந்துகொண்ட படக்குழுவினருக்கு ஆச்சர்யம்.

ஆனால், யாரும் எதிர்பாராத விதத்தில் அந்த வாக்கு பலித்தது.கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, தயாரிப்பு, இயக்கம், நடிப்பு என ஒரு படத்தின் முக்கியப் பொறுப்புகள் அனைத்தையும் சுமந்தவர் டி. ராஜேந்தர் என்கிற டி.ஆர். தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் போதும், எந்தத் துறையிலும் சாதித்துக் காட்டலாம் என்று தமிழ்நாட்டு இளைஞர்களுக்குப் பாடம் போதித்தவர்.

அடுக்கு மொழி வசனம் இவரது படங்களில் ஸ்பெசல் .
இவரது படங்களின் பாடல்களில் செட்டிங் குகள்
அழகானவை.
இளையராஜாவின் பாடல்கள்
பேசப்பட்டப் போது
இவரது இசையும் ரசிக்க வைத்தது.
ரஜினி படங்கள் ரீலிஷான போது
இவரது படங்களும் போட்டியிட்டு
வெற்றி பெற்றது.

சினிமாவில் இன்று வரை கதாநாயகிகளை தொடாமல் நடித்த ஒரே நடிகர் இவர்தான். தங்கச்சி ஃ தங்கச்சி என்று தங்கச்சிகளை தங்கமாக தாங்கியது இவர் படததில்தான்.

தனது படங்களின் பெயர் எழுத்துக்கள் ஒன்பதில் முடியும் சென்டிமெண்ட் இவருக்கு உண்டு.

தனது மகன் சிம்புவை வைத்து
எங்க வீட்டு வேலன் என்ற படம் அன்றே
ஹிட் அடித்த வரலாறு.

சிறந்த தன்னம்பிக்கைக்கு இவரே உதாரணம்.
அதிக திறமையும் அடி சறுக்கும்
என்பதற்கு இவர் எடுத்த வீராசாமியே சாட்சி.

சினிமாவில் இருந்தாலும் எந்த வித கெட்ட பழக்கங்களும் இல்லாதவர்.
தாடியோடு நடித்து
சினிமாவில் அழகு தேவையில்லை
திறமை போதும் என்பதற்கு இவரே உதாரணம்


1980களில் தமிழ் சினிமாவில் நிறைய புரட்சிகள் நடந்துள்ளன. ஆனால் டி.ஆருக்கு நிகராக இன்னொருவரைச் சொல்லவே முடியாது. ஒரு நவீன அலையை உண்டாக்கி வரலாற்றில் இடம்பிடித்தவர் டி.ஆர். வேண்டுமானால், 80களில் இளைஞர்களாக இருந்தவர்களிடம் ஒருதலை ராகம் படம் பற்றிக் கேட்டுப்பாருங்கள். கதை கதையாகச் சொல்வார்கள்.
1980-ல் வெளியான ஒருதலை ராகம் படத்தை டி.ஆர். இயக்கினாலும் தயாரிப்பாளருடனான மோதலால் படத்தில் அவருடைய பெயர் இடம்பெறவில்லை. பட வாய்ப்பு தரும்போது நான் தான் படத்தை இயக்குவேன், கதை, வசனம் உன் பொறுப்பு என்று தயாரிப்பு இப்ராஹிம் கூறியுள்ளார்.

ஆனால் படப்பிடிப்பு ஆரம்பித்த பிறகு டி.ஆர். தான் முழுப் படத்தையும் இயக்கியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவாளர்கள் ராபர்ட் - ராஜசேகரும் பட உருவாக்கத்தில் நிறைய பங்களிப்பு அளித்திருக்கிறார்கள்.ஆனால் படம் வெளியானபோது தயாரிப்பு, இயக்கம் இ.எம். இப்ராஹிம் என்றுதான் இருந்தது. ஆனால் காலம், ஒருதலை ராகம் படத்தின் இயக்கத்துக்கான பொறுப்பை டி.ஆருக்கே வழங்கியது.
இதன் இன்னொரு சர்ச்சை, இசையமைப்பிலும் ஏற்பட்டது.படப்பிடிப்பு முடிந்தபிறகு படம் வெளியாவதில் நிறைய தாமதம் ஏற்பட்டது. பணப் பிரச்னைகளால் திட்டமிட்ட தேதிகளில் வெளியிட முடியாத நிலை உருவானது. நூற்றுக்கும் மேற்பட்ட பிரிவியூ காட்சிகளில் படத்தைப் போட்டுக் காட்டினார் தயாரிப்பாளர். ஆனால் நம்பிக்கையாக யாரும் நாலு நல்ல வார்த்தைகளைக் கூறவில்லை.

ஆனால் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் படம் வெளியான பிறகு ரசிகர்கள் படத்தை அள்ளிக்கொண்டார்கள்.
கல்லூரி இளைஞர்கள் எப்படியொரு படத்துக்காகத் தவம் கிடந்தார்களோ அப்படியொரு படமாக அமைந்தது ஒருதலை ராகம்.முழுக்க முழுக்கப் புத்தம் புதிய படையுடன் களமிறங்கிய 26 வயது டி.ஆர்., கல்லூரி இளைஞர்களிடம் முதல் படத்திலேயே பேராதரவைப் பெற்றார்.

சொல்ல முடியாத காதலையே படத்தின் மையக்கருவாக வைத்து கதையை உருவாக்கியிருந்தார். கதாநாயகன் தங்களுடைய தயக்க உணர்வுகளைப் பிரதிபலித்ததால் இளைஞர்கள் படத்தைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள்.

ரவீந்தர் இந்தப் படத்தில் தான் அறிமுகமானார். படம் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்த மற்றொரு காரணம் - பாடல்கள்.வாசமில்லா மலரிது, இது குழந்தை பாடும் தாலாட்டு என பாடல்களும் இன்னொரு பக்கம் ரசிகர்களை ஈர்த்தது.

காதல் படமென்றாலும் அனைத்து பாடல்களையும் ஆண் பாடகர்களே பாடினார்கள். மயிலாடுதுறையில் படமாக்கப்பட்ட இந்தப் படம் சோகமான முடிவைக் கொண்டிருந்தாலும் அது படத்துக்குக் காவியத்தன்மையை அளித்தது. புதுமுகங்கள் பங்களித்த படம் என்பதால் முதல் வாரம் குறைவான வரவேற்பே கிடைத்தது. ஆனால் முதல் வாரத்தில் படம் பார்த்த கல்லூரி இளைஞர்கள், படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க வந்ததால் அதிகத் திரையரங்குகளில் படத்தைத் திரையிட ஆரம்பித்தார்கள்.

முதல் வாரத்தைத் தாண்டிய பிறகு இதன் ஓட்டத்தை அடுத்த ஒரு வருடத்துக்கு யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. படக்குழுவினர் தமிழகமெங்கும் சென்று படத்தை மேலும் விளம்பரம் செய்தார்கள்.

பட வெற்றியில் ஒரு சோகமும் உண்டு.
படம் வெளிவந்தபோது திரையரங்குக்குச் சென்று பார்க்கக் கையில் காசில்லை. நண்பர் ஒருவர் மூன்றாம் நாளன்று அழைத்துச் சென்றுள்ளார்.

படத்தை இயக்கியவர் என வேறொருவரின் பெயர், இசை - ஏ.ஏ. ராஜ் - டி. ராஜேந்தர் என்றெல்லாம் டைட்டில் கார்டில் வர, கண்ணீருடன் திரையரங்கை விட்டு வெளியேறியுள்ளார் டி.ஆர். அந்தக் காயத்தால் தான் இன்றுவரை அந்த படத்தைப் பார்க்கவில்லை என்கிறார்.

இந்தப் படத்தில் நடித்த ரூபாவுக்கு ஒருதலை ராகம் ரூபா எனப் பெயர் கிடைத்தது. இதில் பவ்யமான பெண்ணாக நடித்ததால் பிறகு அவர் நடித்த எல்லாப் படங்களிலும் அதேபோன்ற வேடங்களே கிடைத்தன.

அடுத்தப் பத்து வருடங்களுக்கு மேலாக தமிழ்த் திரையுலகை இவர் ஆளப் போகிறார் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டுப் போனது ஒருதலை ராகம் படம்.

இந்தப் படத்தில் நடித்த உஷாவைப் பிறகு காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் டி.ஆர்.இன்னொரு ஒருதலை ராகத்தை எப்போது நீங்கள் தருவீர்கள்? என்று டி.ஆரிடம் ஒருமுறை கேட்கப்பட்டபோது அவர் சொன்ன பதில் -
ஒரு பெண் ஒருமுறைதான் பூப்படைவாள்.

2-வது படமாக வசந்த அழைப்புகள் எடுத்தார். இதற்கு இயக்கம் டி.ஆர். தான். முதல் படத்தில் கிடைத்த வெற்றியை டி.ஆரால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

ஒருதலை ராகம் படத்தின் இயக்கம், இசை குறித்து ஏராளமான சர்ச்சைகள் உருவாக்கியதால் அவற்றையெல்லாம் உருவாக்கியது நான் தான் என உலகுக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயம் டி.ஆருக்கு ஏற்பட்டது.

அதுதான் இரயில் பயணங்களில். ஒருதலை ராகம் படத்தை நகல் எடுத்தது போலவே அமைந்தது.

அந்தப் படத்தின் திரைமொழியும் யதார்த்தமான நடிப்பும் இதில் அமையாவிட்டாலும் வணிக அம்சங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் டி.ஆர்.

ராஜீவ், ஸ்ரீநாத், ஜோதி நடித்த இந்தப் படம், ஒருதலை ராகம் போலவே அமைந்ததால் அதற்கு அளித்த வரவேற்பையே இதற்கும் வழங்கினார்கள் ரசிகர்கள். வசந்த காலங்கள்..., வசந்தம் பாடி வர வைகை ஓடிவர ஆராதனை செய்யட்டுமா போன்ற பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்தார் டி.ஆர்.

2-வது பெரிய வெற்றியை அடைந்ததால் டி.ஆரின் பெயர் திரையுலகில் அழுத்தமாகப் பதிந்தது. ஒருதலை ராகம் வெற்றி தனக்குத்தான் சொந்தம் என்பதை இந்த வெற்றியின் மூலம் உணர்த்தினார்.
கல்லூரி இளைஞர்களுக்காகப் படமெடுத்து வந்த டி.ஆர்., சீக்கிரமே தனது பாதையை மாற்றிக்கொண்டு பெண்களையும் கவர ஆரம்பித்தார்.

பல பொறுப்புகளைச் சுமந்துகொண்டாலும் வேகம் மட்டும் குறையவில்லை. தங்கைக்கோர் கீதம், உயிருள்ளவரை உஷா,
உறவை காத்த கிளி என முதல் படத்தை இயக்கியதிலிருந்து அடுத்த நான்கு வருடங்களுக்குள் கடகடவென படங்களை இயக்கினார்.
உறவை காத்த கிளி படத்தில் ஜீவிதாவை அறிமுகம் செய்தார். பத்மா என்கிற அவருடைய பெயரை ஜீவிதா என மாற்றினார்.
இதில் தான் சிலம்பரசன், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
1983-ல் இரு சூப்பர் ஹிட் படங்களை அளித்தார் டி.ஆர்.
கங்கா, நளினி, டி.ஆர். நடித்த படம் - உயிருள்ளவரை உஷா.
சிவகுமார், நளினி, ஆனந்த்பாபு நடித்த படம் - தங்கைக்கோர் கீதம்.
இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் உயர்ந்தார் டி.ஆர்.
இந்த இரு படங்கள் மற்றும் அதன் பாடல்களின் வெற்றிகள் டி.ஆரின் புகழை மேலும் உயரத்துக்குக் கொண்டு சென்றன.

தமிழில் ஒரு வருடம் வரை ஓடிய உயிருள்ள வரை உஷா படம் ஆந்திராவில் டப் செய்யப்பட்டு அங்கு இரு வருடங்கள் ஓடியது.
எப்படி இத்தனை திறமைகள் இவரிடம் உள்ளன, எல்லா வேலைகளையும் செய்ய இவருக்கு நேரம் எங்கிருந்து கிடைக்கிறது என ரசிகர்களை மட்டுமல்லாமல் திரையுலகினரையும் வியக்க வைத்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தபோது ரஜினிக்கும் கமலுக்கும் பெரிய ரசிகராக இருந்தார் டி.ஆர். ஆனால் 80களின் மத்தியில் அவர்களுக்கு இணையான புகழை தானும் அடைந்தார்.
அடுத்த பெரிய வெற்றி 1986-ல் மைதிலி என்னை காதலி படத்தில் கிடைத்தது.

சங்கர் - ரூபா (ஒருதலை ராகம்), ஸ்ரீநாத் - ஜோதி (ரயில் பயணங்களில்),
கங்கா - நளினி (உயிருள்ளவரை உஷா),
சிவகுமார் - நளினி (தங்கைக்கோர் கீதம்)
என பலவிதமான ஜோடிகளை டி.ஆரின் படங்களில் பார்த்த ரசிகர்களுக்கு டி.ஆர். - அமலா ஜோடி மிகவும் வித்தியாசமாக அமைந்தது.
டி.ஆர். அமலாவை விரும்பாவிட்டாலும் அமலாவின் கவித்துவமான காதலை ரசிகர்கள் மிகவும் ரசித்தார்கள்.

பரதநாட்டியம் தெரிந்தவர் தான் கதாநாயகியாக நடிக்கவேண்டும் என்பதால் சென்னை கலாஷேத்ராவில் பயின்று கொண்டிருந்த அமலாவைப் பார்த்த நொடியில் தேர்வு செய்தார்கள் டி.ஆரும் உஷாவும்.

டி.ஆர்., அமலா, ஸ்ரீவித்யா நடித்த இந்தப் படத்தில் அழகான காதல் காட்சிகளும் பாடல்களும் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன.ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் அதற்குக் கிடைக்கும் ஆதரவால் திரையுலகை அசைத்துப் பார்த்தார் டி.ஆர்.
1
987-ல் டி.ஆர் அளித்த இன்னொரு சூப்பர் ஹிட் படம் - ஒரு தாயின் சபதம்.
டி.ஆர்., சாரு ஹாசன், ஸ்ரீவித்யா நடித்த இந்தப் படத்துக்குப் பெண்களின் ஆதரவு வழக்கத்தை விடவும் அதிகமாக இருந்தது. வழக்கறிஞர் வேடத்தில் அடுக்குமொழி வசனங்களைப் பேசி அசத்தினார் டி.ஆர்.

1987-ல் எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது தைரியமாக ஒரு தாயின் சபதம் வெற்றி விழாவுக்கு கருணாநிதியை அழைத்தார் டி.ஆர்.

அப்போது அவர் திமுக உறுப்பினராக இருந்தார்.
அந்த விழாவில் 33 வயது டி.ஆரை, என் தம்பி டி. ராஜேந்தர் என்னில் பாதி என்று பாராட்டினார் கருணாநிதி.

1987-ல் எல்லாம் ரஜினி, கமல் எல்லாம் உச்சத்தில் இருந்தார்கள். இன்னொரு பக்கம் மோகன் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்துக்கொண்டு வந்தார்.
தமிழ் சினிமாவே பலவிதமான மாற்றங்களுக்கு உட்பட்டு வந்தது.
இந்த மாற்றங்களில் டி.ஆரின் படங்களுக்கும் ஓர் இடம் இருந்தன.
ரஜினி, கமல் படங்கள் வெளிவரும்போது இருந்த எதிர்பார்ப்பு டி.ஆருக்கும் இருந்தது.

தனக்கென்று ஒரு வழி அமைத்துக்கொண்டு எந்த விமர்சனங்களையும் சட்டை செய்யாமல் தனக்குத் தோன்றிய கதையைப் படமாக எடுத்து அதை மக்களிடமும் வெற்றிகரமாகக் கொண்டு சேர்த்தார் டி.ஆர்.
தாய்மார்களின் ஆதரவை மேலும் வலுவாக்குவதற்காக டி.ஆர். இயக்கிய மற்றொரு படம் -

" என் தங்கை கல்யாணி."

டி.ஆர்., சுதா, ஸ்ரீவித்யா, எஸ்.எஸ். சந்திரன் நடித்த படம். தங்கை மீது மிகுந்த பாசம் வைப்பதால் ஓர் அண்ணன் எதிர்கொள்ளும் போராட்டங்களை உணர்ச்சிகரமான காட்சிகளால் ரசிகர்களை ஈர்த்தார்.
பாடல்கள் வழக்கம் போல ஹிட்டாகின. டி.ஆரிடம் வழக்கமான மற்றொரு சூப்பர் ஹிட் படம்.
டி.ஆரின் செட்டுகளும் 80களில் விவாதங்களைக் கிளப்பின.

ஒவ்வொரு பாடலுக்கு டி.ஆர். எப்படி செட் அமைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள்.
யதார்த்த வாழ்க்கையில் ஏராளமான கஷ்டங்களுடன் திரையரங்குக்கு வரும் ரசிகர்களுக்கு செட்கள் மூலம் கற்பனை உலகத்தைக் காட்டவேண்டும் எனப் பிரியப்பட்டு அதில் வெற்றியும் அடைந்தார் டி.ஆர்.

என் தங்கை கல்யாணி படத்தின் இன்னொரு சிறப்பு, இதில்தான் வடிவேலு நடிகராக அறிமுகமானார்.
படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வடிவேலுவை அழைத்து சிறிய காட்சி ஒன்றில் நடிக்கவைத்தார் டி.ஆர்.
இதற்குப் பிறகுதான் என் ராசாவின் மனசிலே படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் அறிமுகமானார் வடிவேலு.

டி.ஆரின் மோனிஷா என் மோனாலிசா, சொன்னால் தான் காதலா ஆகிய படங்களிலும் வடிவேலு நடித்துள்ளார்.
90களில் தமிழ் சினிமாவின் காட்சிகள் மாறின. ஜெண்டில்மேன், ரோஜா போன்ற படங்களின் பிரமாண்டமான வெற்றிகள் புதிய பாதையை உருவாக்கின.

இந்தக் காலக்கட்டத்தில் டி.ஆரின் கவனமும் தன்னுடைய வெற்றியை விடவும் சிம்புவைக் கவனமாக ரசிகர்களிடம் அறிமுகப்படுத்துவதில்தான் இருந்தது.
மேலும் 80களில் வெளிவந்த டி.ஆர். பாணியிலான படங்கள் 90களில் வேறு வடிவம் கொண்டன.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, தயாரிப்பு, நடிப்பு, பாடல்கள், இசை என பல துறைகளையும் ஒரு கை பார்த்த டி.ஆர், படத்தொகுப்பை மட்டும் விட்டுவிட்டார்.

அதற்கு அவர் அளிக்கும் விளக்கம் படத்தொகுப்பாளரின் வேலை என்பது ஓர் அறைக்குள் அடைந்து கிடக்கவேண்டும்.
என்னால் அப்படி இருக்கமுடியாது. இசையமைக்கும்போது கூட நடந்துகொண்டே இசையமைப்பேன்.

எனக்கு படத்தொகுப்பு பிடிக்கும் என்றாலும் சுதந்திரப் பறவையாக இருக்க விரும்பியதால் அந்த வேலையைச் செய்யவில்லை என்கிறார்.

1986-ல் தேசிய விருது பெற்ற கன்னட இயக்குநர் கிரீஷ் காசரவல்லி, டி.ஆர். படம் எடுக்கும் விதம், அவருடைய வெற்றிகள் எல்லாம் கேள்விப்பட்டு டி.ஆரைப் பற்றி ஒரு குறும்படம் எடுக்க ஆசைப்பட்டுள்ளார்.
இதை நடிகர் சாருஹாசன் டி.ஆரிடம் தெரிவித்தபோது மறுத்துள்ளார்.

ல்லோரும் ஒரு வழியாகப் போய்க்கொண்டிருப்பார்கள்.
அந்த விதிமுறைகளை மீறி வெற்றி பெறுபவன் மீது கோபம் இருக்கும். அந்தக் கோபத்தை அடக்கி வைத்திருப்பார்கள்.

நாம் கால் தடுமாறும்போது நம் காலை வாரிவிடுவார்கள். என்னை வைத்துப் படம் எடுத்தால் அது எனக்கே எதிராகத் திரும்பிவிடும் என்று விளக்கம் சொல்லி கோரிக்கையை மறுத்துள்ளார்.
டி.ஆர். பற்றி சாரு ஹாசன் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

படப்பிடிப்பில் ஒரு துண்டுக் காகிதம் இல்லாமல் கதை, திரைக்கதை, வசனம் எல்லாவற்றையும் தலைக்குள் வைத்துக்கொண்டு வரும் இயக்குநர் இவரைத் தவிர உலக அளவில் யாரும் இல்லை.

1980களில் இளையராஜா, வைரமுத்து, வாலி என இசையுலகில் புதுக்கூட்டணிகள் அசத்திக்கொண்டிருந்தபோது இவர்களுடன் எவ்விதத்திலும் சம்பந்தப்படாமல் தனி ஆளுமையாக உருவாகினார் டி.ஆர்.

எளிமையான அதேசமயம் அர்த்தமுள்ள வரிகள் இளைஞர்களை மிகவும் ஈர்த்தன. இசையிலும் கலக்கியதால் இசை வாய்ப்புகளும் டி.ஆரை நோக்கி வந்தன.
இயக்குநராக, நடிகராக, இசையமைப்பாளராக, கதாசிரியராக என டி.ஆர். கை வைத்த எந்தத் துறையிலும் அவருக்குத் தோல்வியே கிடைக்கவில்லை. அதேபோல டி.ஆர். பாடல்கள் என்றால் அதுபற்றி பல மணி நேரம் பேசக்கூடியவர்கள் இன்றைக்கும் உள்ளார்கள்.

ஒருதலை ராகம் படத்தில் இது குழந்தை பாடும் தாலாட்டு, வாசமில்லா மலரிது (எஸ்.பி.பி) பாடல்கள் ரசிகர்களைக் கட்டிப்போட்டன.

முதல் படத்திலேயே எல்லாப் பாடல்களையும் எழுதி இசையமைத்தார். என் கதை முடியும் நேரமிது, நான் ஒரு ராசியில்லா ராஜா (டி.எம்.எஸ்.), அட மன்மதன் ரட்சிக்கணும் (ஜாலி ஆபிரஹாம்), கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்... (பி.ஜெயச்சந்திரன்), கூடையில கருவாடு கூந்தலில பூக்காடு... (மலேசியா வாசுதேவன்) என ஏழு பாடல்களையும் சூப்பர் ஹிட்டாக மாற்றினார்.
ஒருதலை ராகம் என்பது காதல் படம். அதில் பெண் குரலே இடம்பெறாமல் புதுமை செய்திருந்தார்.

ஒருதலை ராகம் படத்தில் டி.ஆரின் பங்களிப்பில் நிறைய சர்ச்சைகள் உள்ளதால் தன்னுடைய திறமை, வெற்றிகளை மீண்டும் நிரூபிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளானார் டி.ஆர். அதுதான் இரயில் பயணங்களில். வசந்தம் பாடிவர வைகை ஒடிவர (எஸ்.பி.பி.), அமைதிக்குப் பெயர்தான் சாந்தி (டி.எம்.எஸ்.), வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் (ஜெயச்சந்திரன்) என படத்தின் அனைத்துப் பாடல்களும் ஹிட் ஆகி டி.ஆரின் இசைத் திறமையை மீண்டும் நிரூபித்தன.
பெண் குரலில் ஒரே ஒரு பாடல். வசந்தம் பாடி வர பாடலை ஜானகி பாடியிருந்தார்.
மோகன், பூர்ணிமா நடித்த கிளிஞ்சல்கள் படத்துக்கு இசையமைத்து அதிலும் வெற்றியை நாட்டினார் டி.ஆர்.
விழிகள் மேடையாம் பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட் ஆனது.
இதன்பிறகு, தான் இயக்காத பல படங்களுக்கு இசையமைத்தார்.
தங்கைக்கோர் கீதம் படத்தில் எஸ்.பி.பி பாடிய தஞ்சாவூரு மேளம், எல்.ஆர். அஞ்சலி பாடிய தண்ணியில மீனப்போல... மற்றும் டி.ஆர். பாடிய தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி போன்ற பாடல்களை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள்.

ரசிகர்கள் தனது இசையையும் பாடல் வரிகளையும் ரசிக்கிறார்கள் என்று தெரிந்த பிறகு டி.ஆரிடமிருந்து இன்னும் விதவிதமான பாடல்கள் வெளிவந்தன.
உயிருள்ளவரை உஷாவில் கே.ஜே. யேசுதாஸ் பாடிய வைகைக் கரை காற்றே நில்லு மற்றும் எஸ்.பி.பி. பாடிய கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்குப் பாடல்கள் ஹிட் ஆகின. ஜானகி இரு பாடல்களைப் பாடினார்.

உறவைக் காத்த கிளியில் 4 பாடல்கள் தான். யேசுதாஸ் பாடிய எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி பாடல் சூப்பர் ஹிட் ஆனது.
பூக்களைத்தான் பறிக்காதீர்கள் பாடப் பாடல்களை யாரால் மறக்க முடியும்?
1986-ல் வெளியான இந்தப் படத்தில் மலேசியா வாசுதேவன் பாடிய பூக்களைத்தான் பறிக்காதீர்கள் பாடலை எப்போது கேட்டாலும் அந்தக் காலத்துக்கு அழைத்துச் செல்லும்.

1986-ல் வெளியான மைதிலி என்னை காதலி படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்.
யேசுதாஸ், டி.ஆர். பாடிய அட பொன்னான மனசே, டி.ஆர். பாடிய என் ஆசை மைதிலியே, எஸ்.பி.பி. பாடிய பொன்மானை, தண்ணீரிலே நானும் உந்தன் பாடல்கள் எல்லாம் ரசிகர்களைச் சிலிர்க்க வைத்தன.

யோசித்துப் பாருங்கள், இளையராஜா இசையில் ராஜாங்கம் நடத்திய காலக்கட்டத்தில் தன்னளவில் இன்னொரு பக்கம் ஹிட் பாடல்களைக் கொடுத்து முத்திரை பதித்துக்கொண்டிருந்தார் டி.ஆர்.
90களில் தேவா எப்படி இசையமைப்பாரோ அப்படி இசையமைத்திருந்தார்.
விஜய்காந்த் நடிப்பில் ராஜசேகர் இயக்கிய கூலிக்காரன் படத்துக்கு. எஸ்.பி.பி. பாடிய வெச்சக்குறி தப்பாது, எஸ்.பி.பி., ஜானகி பாடிய குத்துவிளக்காக பாடல்கள் படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவின.

1987-ல் வெளியான ஒரு தாயின் சபதம் படத்தில் சொல்லாமத்தானே இந்த மனசு துடிக்குது, அட காதலிச்சா போதாது, ராக்கோழி கூவையில போன்ற பாடல்களை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்தார்கள்.

என் தங்கை கல்யாணி படத்தில் தோள் மீது தாலாட்ட, தங்கச்சிக்கு சீமந்தம், பூ ஒன்று வளர்த்தேன் எனத் தொடர்ந்து ஹிட் பாடல்களை அளித்தார் டி.ஆர். இந்தப் படத்தின் இசைத்தட்டு விற்பனையில் சாதனை படைத்தார் டி.ஆர்.
இதற்காக அவருக்கு தங்க இசைத்தட்டு பரிசாகக் கிடைத்தது.
1955/May/09 அன்று பிறந்து
தற்போது 66வயதை கடந்துகொண்டிருக்கும் இவரின் பிள்ளைகள் சிலம்பரசன் (நடிகர் சிம்பு)தற்போது தமிழ்திரைஉலகில் லிட்டில் சுப்பர் ஸ்டார் என அழைக்கபடுபவர்..
மற்றும் குறளரசன்,இலக்கியா ஆகியோரை உள்ளடக்கிய மகிழ்வான குடும்பம்..

நான்_அம்பேத்கர்_பேசுகிறேன்

#நான்_அம்பேத்கர்_பேசுகிறேன்.... என் சிலையின் தலையை உடைக்க காரணம் - என் சிலைக்கும் உயிர் இருப்பதாய் அவர்கள் நினைக்கிறாா்கள்.! என் சிலையின் பீ...